திருப்பூர் மாவட்டம் காங்கேயம், முத்தூர் அருகே வேலம்பாளையம் ஊராட்சி சாமிநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 65). கைத்தறி நெசவு தொழிலாளி. இவரது மனைவி பாப்பாத்தி (60). இவர்களது மகன் தினேஷ்குமார் (37). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும் பரமத்தி வேலூரை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இவர்கள் கூட்டுக்குடும்பமாகவே வாழ்ந்து வந்தனர். தினமும் தினேஷ்குமார், முத்தூரில் இருந்து நாமக்கல்லுக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தினேஷ்குமார் தனது மனைவியை பரமத்தி வேலூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு வந்தார்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுகிழமை என்பதால் தினேஷ்குமார் வேலைக்கு போகவில்லை. இதனால் பெற்றோருடன் வீட்டில் இருந்தார். தினமும் மாலையில் இவர்களது வீட்டுக்கு வியாபாரி ஒருவர் பால் ஊற்றுவார். அதன்படி, ஞாயிறன்று வழக்கம் போல் பால் ஊற்றுவதற்காக பால் வியாபாரி வந்தார். பின்னர் வீட்டுக்கு வெளியே நின்று சத்தம் போட்டுள்ளார் .
ஆனால் தினேஷ்குமாரின் வீட்டில் இருந்து யாரும் பால் வாங்க வெளியே வரவில்லை. இதனால் சிறிது நேரம் காத்திருந்த பால் வியாபாரி, தினேஷ்குமார் வீட்டின் சுற்றுச்சுவர் அருகே சென்று வீட்டுக்குள் எட்டிப் பார்த்தார்.
அப்போது அங்கு அவர் கண்ட காட்சி அவரை நிலைகுலைய செய்தது. காரணம் ராமசாமி, பாப்பாத்தி ஆகிய இருவரும் முற்றத்திலும், மகன் தினேஷ்குமார் வீட்டுக்குள்ளும் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கும், வெள்ளகோவில் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தூக்கில் தொங்கிய தாய்-தந்தை, மகன் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு கடிதம் ஏதும் எழுதி வைத்துள்ளார்களா? என போலீசார், வீட்டுக்குள் சென்று தேடிப்பார்த்தனர். ஆனால் கடிதம் ஏதும் சிக்கவில்லை.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாய்-தந்தை, மகன் என 3 பேரும் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள்? குடும்ப தகராறு ஏதாவது காரணமாக இருக்குமா? அல்லது குடும்பத்தில் பொருளாதார ரீதியாக ஏதாவது பிரச்சினை உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
