Headlines

சென்னையிலிருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் : குன்னூர் அருகே பொதுமக்கள் நடமாட தடை

சென்னையிலிருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் : குன்னூர் அருகே பொதுமக்கள் நடமாட தடை

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பாறைகளை வெடி வைத்து தகர்க்க முயன்றபோது எதிர்பாராத விதமாக வெடிபொருள் வெடித்ததில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில், பாறைகளுக்கு இடையே வைக்கப்பட்டுள்ள மேலும் 3-க்கும் மேற்பட்ட வெடிபொருட்களை அகற்றும் பணிக்காக சென்னையிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, வெடிபொருட்களை அகற்றும் பணிகள் நடைபெற உள்ளதால், அந்தப் பகுதியில் உள்ள கிராம மக்கள் மதியம் வரை வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட எந்தவொரு தொழிலாளரும் பணிக்கு செல்லக்கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், கிராமத்திற்குள் பொதுமக்கள் உள்ளிட்ட வெளிநபர்கள் யாரும் நுழையாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெடி பயன்படுத்த தடை

நீலகிரி மாவட்டத்தில் பாறைகளை வெடிபொருட்களை பயன்படுத்தி தகர்க்கவும், குறிப்பிட்ட பகுதிகளில் ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களை இயக்கவும் தடை உத்தரவு அமலில் உள்ளது.

இந்த நிலையில், குன்னூர் அருகே ஜகதளா பேரூராட்சிக்குட்பட்ட பந்துமை கிராமத்தில் உள்ள மைதானத்தை விரிவுபடுத்தி, தடுப்புச்சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மைதானத்தில் இருந்த பாறைகளை ஆட்கள் மூலம் உடைப்பதற்கு கோத்தகிரி வட்டாட்சியரிடம் உரிய அனுமதி பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

தடையை மீறி பயன்படுத்தப்பட்ட வெடிபொருளால் இருவர் காயம்

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை பாறைகளை ஆட்கள் மூலம் உடைக்காமல், வெடிபொருட்களை பயன்படுத்தி தகர்க்க முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக வெடிபொருள் வெடித்ததில், குன்னூர் சின்ன வண்டிச்சோலை பகுதியை சேர்ந்த கோபால் மற்றும் காரமடை பகுதியை சேர்ந்த செல்வராஜ் ஆகிய இருவர் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்த இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஊர் தலைவர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஊர் தலைவர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாறைகளில் சிக்கியுள்ள வெடிபொருட்கள்

இதற்கிடையே, சம்பவம் நடைபெற்ற இடத்தில் பாறைகளுக்கு இடையே மேலும் 3-க்கும் மேற்பட்ட வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அவை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயம் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று நிபுணர்கள் அந்த வெடிபொருட்களை பாதுகாப்பாக அகற்றும் பணியில் ஈடுபட உள்ளனர்.

வெளியே நடமாட தடக

வெடிபொருட்களை அகற்றும் பணியை முன்னிட்டு பந்துமை கிராமத்தில் வசிக்கும் மக்கள் மதியம் வரை வீடுகளை விட்டு வெளியே வர போலீசார் தடை விதித்துள்ளனர்.

மேலும், தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் மற்றும் இதர பணிகளுக்காக செல்லும் தொழிலாளர்களும் அந்தப் பகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிராமத்தின் நுழைவுப் பகுதிகளில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி, பொதுமக்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

வெடிபொருட்கள் அகற்றும் பணி நடைபெறுவதையொட்டி, பந்துமை கிராமம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *