துண்டு துண்டாக வெட்டி கொ**ப்பட்ட பெண் : துப்பு துலக்கிய போலீசார்
சேலத்தில் துண்டு துண்டுகளாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசிப்பட்ட பெண்ணின் அடையாளத்தை போலீசார் கண்டறிந்தனர்.
சேலம் மாநகர் அரிசிபாளையம் பகுதியில் குணபால ராமசாமி தெருவில் வசிப்பவர் கோவில் பூசாரி ரமேஷ்.
இவர் கோவிலுக்கு சொந்தமான வீட்டில் தனது மனைவி ஜமுனா ராணி ,மகன் கௌதம் ஆகியோருடன் 20 வருடங்களாக வசித்து வருகிறார்.
நேற்று முன் தினம் திருமண நாள் என்பதற்காக குடும்பத்துடன் தஞ்சாவூர் கோவிலுக்கு சென்றவர், நள்ளிரவில் வீடு திரும்பி உள்ளார்.
அதிகாலை குளிப்பதற்காக குளியல் அறையில் குழாயில் தண்ணீர் திறந்த போது கடும் துர்நாற்றம் வீசி உள்ளது. பின்னர் அவர் தனது மகன் கௌதமுடன் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது, அதில் ஒரு மூட்டை இருந்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் மூட்டையை திறந்த போது, அதில் கை கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முழுமையாக
சோதனை செய்ததில் அதில் கை மற்றும் கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு நிலையில் மூட்டைகள் இருந்தது.
பின்னர் போலீசார் மற்றொரு தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது அந்தத் தொட்டிக்குள் மேலும் இரண்டு மூட்டையில் உடல் பகுதி இருந்துள்ளது.
மூன்று மூட்டைகளையும் கைப்பற்றிய போலீசார், அதில் இருந்த சடலம் ஒரு பெண்ணுடையது என்பதை உறுதி செய்தனர்
மேலும் அந்த மூட்டையில் உள்ள ஏழு துண்டுகளாக வெட்டப்பட்ட பாகங்களை ஒன்றிணைத்து ஆய்வு செய்தனர்.
மீட்கப்பட்ட சடலத்தின் கையில் விநாயகர் படமும் கணபதி என்ற பெயரும் பச்சை குத்தப்பட்ட நிலையில் துண்டு துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட பெண் சேலம் மேட்டுப்பட்டி தாதனூர் பாலாஜி காலனி பகுதியை சேர்ந்த சமையல் வேலை செய்யும் தங்கமணி என்று அடையாளம் தெரிந்தது.
இந்தக் கொலை திருமணத்தை மீறிய உறவின் காரணமாக நடந்திருக்கலாம் என்றும், இதை ஒருவர் மட்டும் செய்திருக்க முடியாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட தங்கமணியுடன் சமையல் வேலை செய்து வந்த செல்லதுரை என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
