Headlines

கையும்,களவுமாக பிடிபட்ட முகமூடி கொள்ளையன் : சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கையும்,களவுமாக பிடிபட்ட முகமூடி கொள்ளையன் : சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திமிரி அருகே பூட்டிய வீட்டில் முகமூடி அணிந்து கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கையும் களவுமாக பிடிபட்டார்.
முகமூடி மற்றும் கையுறை அணிந்து கொள்ளையடிக்க வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த வரகூர்பட்டி கொள்ளைமேடு பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி, 74. விவசாயியான இவர், நேற்று மாலை குடியாத்தம் பகுதியில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

இதனிடையே, இரவு சுமார் 10 மணியளவில் மாசிலாமணி வீட்டில் இருந்து சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் அவருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மாசிலாமணி தனது அண்ணன் மகன் சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்து, வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

உடனடியாக வீட்டிற்கு சென்ற சீனிவாசன், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், வீட்டிற்குள் தொடர்ந்து சத்தம் கேட்டதால் உள்ளே சென்று பார்த்தபோது, முகமூடி மற்றும் கையுறை அணிந்த மர்ம நபர் ஒருவர் பீரோக்களை உடைத்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்த நபரை சீனிவாசன் கையும் களவுமாக பிடித்துள்ளார். பின்னர் அவரது முகமூடியை அகற்றி பார்த்தபோது, அவர் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து திமிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜ்குமாரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், வீட்டில் பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த ரூ5 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 2 சவரன் தங்க நகைகள் காணவில்லை என வீட்டின் உரிமையாளர் மாசிலாமணி திமிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, முகமூடி மற்றும் கையுறை அணிந்து ராஜ்குமார் வீட்டிற்குள் கொள்ளையடிக்க வருவது போன்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

திருமண நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டிவிட்டு சென்ற நிலையில், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் முகமூடி அணிந்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்று கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *