கட்டுப்பாட்டை இழந்த கார் : 15 தூரத்தில் பறந்து விழுந்த இன்ஜின்
வாணியம்பாடி அருகே ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பில் மோதி, பின்னால் வந்த காரின் மீதும் மோதி ஏற்பட்ட விபத்தில் காரின் இன்ஜின் 15 அடி தூரத்திற்கு பறந்து சென்று விழுந்தது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.


காரை சென்னையைச் சேர்ந்த வினோத் கண்ணா (36) ஓட்டிச் சென்ற நிலையில், வளையாம்பட்டு பகுதியில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பில் பயங்கரமாக மோதி, பின்னால் வந்த மற்றொரு கார் மீது மோதியது.இந்த விபத்தில் முதல் காரின் இன்ஜின் கழன்று சுமார் 15 அடி தூரத்தில் தனியாக விழுந்தது. தொடர்ந்து, பின்னால் வந்த காரும் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சேலத்தைச் சேர்ந்த மணிகண்டன், ரவி, குமார் உள்ளிட்ட நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி நகர போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி, சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாதிக்கப்பட்ட போக்குவரத்தை சீர் செய்தனர்.
விபத்தில் கார் இன்ஜின் கழன்று 15 அடி தூரத்தில் தனியாக விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
