Headlines

குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த பெண் : அரக்கோணம் அருகே சோகம்

குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த பெண் : அரக்கோணம் அருகே சோகம்

அரக்கோணம் அருகே தாய் தனது இரு மகன்களுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம்
அரக்கோணத்தை அடுத்த மங்கம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோட்டையா (30). அம்மிக்கல் செய்யும் தொழிலாளியான இவர், உடல்நலக்குறைவு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

இவரது மனைவி வள்ளி (23). இவர்களுக்கு பரத் (7), சந்தோஷ் (3) என 2 மகன்கள் இருந்தனர்.கணவர் உயிரிழந்த நிலையில், வள்ளி தனது இரு மகன்களுடன் மங்கம்மாபேட்டையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை அரக்கோணம்- திருத்தணி ரயில் மார்க்கத்தில் மங்கம்மாபேட்டை பகுதியில் அரக்கோணத்தில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற மின்சார ரயில் முன் வள்ளி தனது இரு மகன்களுடன் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த வள்ளி மற்றும் அவரது இரு மகன்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வள்ளி குடும்ப வறுமை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்தாரா? அல்லது உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் தனது இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் மங்கம்மாபேட்டை பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *