வேளாங்கண்ணி பேராலய விழா கொடியேற்றத்தின் போது பட்டாசு தீப்பொறி பட்டு ராட்சத பலூன் வெடித்ததில் சென்னையை சேரந்த இருவர் காயமடைந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. ‘கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம்’ என அழைக்கப்படும் இங்கு ஆண்டுதோறும் பெருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று மாலை கொடியேற்ற நிகழ்வை மக்கள் திரளாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, விழாவிற்காக அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த காஸ் நிரப்பப்பட்ட பலூன்கள் மீது, பட்டாசுகளிலிருந்து வெளிவந்த தீப்பொறி எதிர்பாராதவிதமாகப் பட்டது.
இதில் காஸ் பலூன்கள் பலத்த சத்தத்துடன் திடீரென வெடித்துச் சிதறின.
வெடித்த பலூன்கள் தீயோடு கீழே விழுந்ததில் விழாவைப் பார்க்க வந்த சென்னை பெரியமேட்டைச் சேர்ந்த கலைச்செல்வன் (34) என்பவரது வலது கையில் தோல் உரிந்து பலத்த காயமும், சென்னை அபிராமிபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் (38) என்பவரது முகத்தில் காயமும் ஏற்பட்டது.
காயமடைந்த இருவரையும் மீட்ட அருகிலிருந்தவர்கள், உடனடியாக சிகிச்சைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு (GMCH) அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து வேளங்கண்ணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
