Headlines

மருத்துவமனைக்குள் கத்தியுடன் வந்த நபர் : அதிரச்சியில் ஆழ்ந்த நோயாளிகள்

மருத்துவமனைக்குள் கத்தியுடன் வந்த நபர் : அதிரச்சியில் ஆழ்ந்த நோயாளிகள்

விபத்தை ஏற்படுத்திய நபரை காவல்துறை கண்டுபிடிக்காத ஆத்திரத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் கத்தியுடன் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அரசனி முத்துப்பட்டி அருகே உள்ள நைனாங்குளம் கிராமத்தை சேர்ந்த மலையாண்டியின் மகன் பாலகிருஷ்ணன் (38) இவரது தாயார் மல்லிகா, கடந்த 25ஆம் தேதி பொன்னா குளம் விளக்கு பகுதியில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மல்லிகா, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து தொடர்பாக சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தும்
இந்த விபத்தில் தொடர்புடைய வாகன ஓட்டுநரை இதுவரை கண்டுபிடிக்கவில்லை எனக் கூறி, பாலகிருஷ்ணன் கடும் ஆத்திரமடைந்து நேற்று திடீரென கையில் கத்தியுடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வார்டுக்குள் நுழைந்துள்ளார்.

அங்கு, “காவல்துறையை வரச் சொல்லுங்கள்… குற்றவாளியை பிடிக்க முடியாத காவல்துறை என்ன காவல்துறை?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியதுடன், கத்தியையும் காட்டியதாக கூறப்படுகிறது.

கையில் கத்தியுடன் வார்டுக்குள் நுழைந்த நபரை பார்த்ததும், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பீதியடைந்தனர்.

உடனடியாக பாதுகாப்புப் பணியில் இருந்த செக்யூரிட்டிகள் அவரை சமரசப்படுத்தி கட்டுப்படுத்தினர்.

பின்னர் அங்கிருந்த காவலர் அவரை அழைத்துச் சென்று சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஒப்படைத்தார்.

மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கத்தியுடன் ஒருவர் எவ்வித தடையுமின்றி நோயாளிகள் தங்கி இருக்கும் 105 வது வார்டுக்குள் நுழைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளியை கைது செய்யவில்லை என்ற கோபத்தில் கத்தியுடன் வந்த சம்பவம் ஒருபுறம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதுகாப்பு நிறைந்திருக்க வேண்டிய அரசு மருத்துவமனைக்குள் கத்தி எப்படி கொண்டு வரப்பட்டது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாலகிருஷ்ணனிடம் சிவகங்கை நகர் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *