கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் கே. என். நேருவின் சகோதரர் மணிவண்ணன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி தில்லை நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் வீட்டில், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நான்கு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், வீட்டுக்குள் சென்று ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனிடையே, சென்னையில் உள்ள கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கோவை திருச்சி சாலையில் உள்ள ட்ரூ வேலி ஹோம் அடுக்குமாடி குடியிருப்பில், கே.என். நேருவின் சகோதரர் மணிவண்ணனுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே நேரத்தில் கே.என். நேருவின் குடும்பத்தினருடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சோதனைகளுக்கான காரணம், அதிகாரிகள் ஆய்வில் ஆவணங்கள் மற்றும் ஏதேனும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
சோதனை நிறைவடைந்த பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
