எடப்பாடி அருகே கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டு
சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசப்பட்ட வழக்கில் அப்பெண்ணின் காதலன் கைது செய்யப்படார்.
திருமணத்திற்கு வற்புறுத்தியதால் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொன்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்திற்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம் பச்சாலியூர் அருகே திருமணம் ஆகாமலேயே ஏழு மாத கர்ப்பமாக இருந்த கோகிலா ( 23) என்ற பெண் விவசாய கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து
சேலம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
கோகிலாவின் 7 மாத கர்ப்பத்திற்கு காரணமான கன்னியாம்பட்டி பகுதியை சேர்ந்த மாரி என்பவரது மகன் அம்மாசி (26)என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது
அம்மாசி காவல் துறையினரிடம் , சம்பவத்தன்று நான் இரவு கோகிலாவிடம் நீ கர்ப்பமாக இருப்பதை வெளியில் சொல்லி என்னை அசிங்கப்படுத்தி விட்டாயே என்று கேட்டதாகவும், அதற்கு இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதில் ஆத்திரம் அடைந்து கோகிலாவை பலமாக தாக்கியதாகவும், அதில் கோகிலா நிலைகுலைந்து மயங்கி விழுந்ததாகவும், பிறகு அம்மாசி கோகிலாவை துப்பட்டாவால் கழுத்தை இறக்கி கொடூரமாக கொலை செய்ததாகவும் தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் வீட்டிலிருந்த ஒரு சாக்கு பையில் கோகிலாவின் உடலை மூட்டையாக கட்டி தனது இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று வெள்ளாளபுரம் அருகே உள்ள விவசாய கிணற்றில் வீசியதாகவும் தெரிவித்தார்.
மேலும் கோகிலாவின் பெற்றோரிடம் கோகிலா மாயமாகிவிட்டதாக கூறி தேடும்போது தானும் அவர்களுடன் கோகிலாவை தேடுவது போல நடித்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அம்மாசியை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
