Headlines

மானிய விலையில் வெங்காய விற்பனை : துவக்கி வைத்த அமைச்சர்கள்

மானிய விலையில் வெங்காய விற்பனை : துவக்கி வைத்த அமைச்சர்கள்

நியாய விலை கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை உணவுத் துறை
அமைச்சர் வெங்கட்ரமணன், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் சென்னையில் துவங்கி வைத்தனர்.

அண்டை மாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக தமிழ்நாட்டிற்கு வரும் வெங்காயத்தின் அளவு கடுமையாக குறைந்துள்ளது.

இதனால் வெங்காயம் விலை கடந்த ஒரு வாரமாக 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் , சந்தையில் வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்களிடமிருந்து ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 29-க்கு கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு ரூ. 35 என்ற கட்டுப்படுத்தப்பட்ட விலையில் நியாயவிலைக் கடைகளில் வழங்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டி யு சி எஸ் நியாய விலை கடையில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் தொடங்கி வைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வெங்கட்ரமணன் பேசியதாவது,

வெங்காய விளைச்சல் குறைவு மற்றும் வரத்துக் குறைவு காரணமாக வெளிச்சந்தையில் கிலோ ₹70 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், வெளிமாநிலங்கள் மற்றும் உற்பத்தியாகும் மாவட்டங்களிலிருந்து 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் உடனடியாகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள 8,419 ரேஷன் கடைகள் மூலம் ஒரு குடும்ப அட்டைக்கு 1 கிலோ வெங்காயம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர்.

இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளில் உள்ள கூட்டுறவு மற்றும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

தேவைப்பட்டால் வரத்து அதிகரிப்பைப் பொறுத்து குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் அளவை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சர்க்கரை மற்றும் அரிசி விலை ஏற்றம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் புகார்களுக்கு பதிலளித்த அமைச்சர், சந்தையில் கருப்புச் சந்தை மற்றும் இடைத்தரகர்களின் செயல்பாடுகளைத் தடுக்க அரசு தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்

அம்மா உணவக ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் அங்கு உணவின் தரம், சுகாதாரத்தைப் பேணுவது தொடர்பான கோரிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு விரைவில் உரிய தீர்வு காணப்படும் என்றார்.

முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளரா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் வெங்கட்ரமணன் ,

தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் அன்பு ஆசியின் காரணமாக அப்படிப்பட்ட கருத்துக்கள் வெளியாவதாகவும் மேலும் இதற்கான காலம் அதிக அளவில் உள்ளதாகவும் அப்போது இது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். மேலும் தேசிய அளவிலான தேர்தல் வரும்போது அது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *