கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி: பெண் ஊராட்சி மன்ற தலைவரால் பரபரப்பு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முகையூர் அருகே உள்ள கொடுங்கால் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தன்னை ஊராட்சி மன்ற தலைவராக முறையாக பணியாற்ற விடாமல் சிலர் தொடர்ந்து தடுத்து வருவதாகவும், தான் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் என்பதால் தன்னை அவமானப்படுத்தி பாகுபாடு காட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை தனக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என அவர் வேதனை தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றபோது அங்கிருந்த காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாக தலையிட்டு அவரைத் தடுத்து அவர் தலையில் தண்ணீர் ஊற்றி பாதுகாப்பாக மீட்டனர்.
இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
