Headlines

தண்ணீ்ர் தொட்டிகளில் வீசப்பட்ட பெண் சடலம் : சேலத்தில் கொடூரம்

தண்ணீ்ர் தொட்டிகளில் வீசப்பட்ட பெண் சடலம் : சேலத்தில் கொடூரம்

சேலத்தில் அடுத்தடுத்த வீடுகளின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் பெண் ஒருவரை துண்டு, துண்டாக வெட்டி, மூட்டைகள் கட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம், அரிசிபாளையம் குணபல ராமசாமி தெருவில் சவுண்டம்மன் கோவில் பூசாரி ரமேஷ் என்பவர் கோவிலுக்கு சொந்தமான வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டின் மாடியில் உள்ள அறையின் மேல் தலா ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சின்டெக்ஸ் தொட்டிகள் உள்ளன.

நேற்றைய தினம் ரமேஷுக்கு திருமண நாள் என்பதால் குடும்பத்துடன் தஞ்சாவூர் கோவிலுக்கு சென்றவர், நேற்றைய தினம் இரவு வீடு திரும்பி உள்ளார்.

இன்று காலை குளிப்பதற்காக குளியல் அறையில் குழாயில் தண்ணீர் திறந்த போது துர்நாற்றம் வீசி உள்ளது.

பின்னர் அவர் தனது மகன் கௌதம்ராஜுடன் மேலே சென்று தொட்டியை திறந்து பார்த்தபோது, தொட்டிக்குள் ஒரு மூட்டை இருந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் மூட்டையை திறந்த போது, அதில் கைகள் துண்டாக வெட்டப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.

ரமேஷ் திறந்து பார்த்த மூட்டையை முழுமையாக போலீசார் சோதனை செய்ததில் அதில் கை மற்றும் கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருந்தது.

பின்னர் போலீசார் மற்றொரு தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது அந்தத் தொட்டிக்குள் மேலும் ஒரு மூட்டையில் மார்பகம் மற்றும் தலை பாகங்கள் இருந்துள்ளது.

இதற்கிடையில் ரமேஷ் வீட்டின் பின்பக்கம் உள்ள சந்திரா என்பவருக்கு சொந்தமான வீட்டின் மாடியில் உள்ள தொட்டியில் மேலும் ஒரு மூட்டை இருந்துள்ளது. அந்த மூட்டையில் இடுப்பு பாகம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மூன்று மூட்டைகளையும் கைப்பற்றிய போலீசார், அதில் இருந்த சடலம் ஒரு பெண்ணுடையது என்பதை உறுதி செய்தனர். மேலும் உடல் பாகங்களை ஒன்றிணைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

மீட்கப்பட்ட சடலத்தின் கையில் கணபதி என்று பச்சை குத்தப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

மேலும் சடலம் கைப்பற்றப்பட்ட வீட்டை சுற்றி உள்ள வீடுகள் அனைத்தும் நெருக்கம் நெருக்கமாக இருப்பதால் அருகில் உள்ள கட்டிடத்தின் வழியாக யாரேனும் வந்து தொட்டிக்குள் வீசி இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ரமேஷ் வீட்டிற்கு பின்புறம் உள்ள வீட்டின் உரிமையாளர் சந்திரன் பெங்களூருவில் உள்ளார்.
அவர் தனது வீட்டை கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு விட்டுள்ளார்.
அந்த வீட்டில் மூதாட்டி ஒருவரும் அவருடைய பேரன் கோகுல் என்பவரும் வசித்து வருகின்றனர்.

கோகுல் சேலம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறார் அந்த வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டிகளும் ஒரு மூட்டை இருந்துதால் அந்த வீட்டில் இருந்தவர்களை போலீசார் விசாரணை செய்ய முயன்ற போது பாட்டியும், பேரனும் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.

இந்த சம்பவத்திற்கும் கோகுலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துண்டு துண்டாக வெட்டி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *