Headlines

கேள்வி எழுப்பிய மாணவி தற்கொலை : தலைமையாசிரியர் மீது பாய்ந்த சாதிய வன்கொடுமை வழக்கு

கேள்வி எழுப்பிய மாணவி தற்கொலை : தலைமையாசிரியர் மீது பாய்ந்த சாதிய வன்கொடுமை வழக்கு

உசிலம்பட்டி என் அம்மா உங்கள் முன் ஏன் கைகட்டி நிற்க வேண்டும்? என கேள்வி எழுப்பிய பட்டியலின மாணவி தற்கொலை செய்த வழக்கில் தலைமையாசிரியர் மீது சாதிய வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள், 10-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பூச்சிப்பட்டியில் உள்ள அரசு கள்ளர் பள்ளியில் பிளஸ் 1 சேர்ந்துள்ளார். சில நாட்கள் மட்டுமே பள்ளிக்கு சென்ற மாணவி, பின்னர் பள்ளிக்கு செல்லவில்லை. இதையடுத்து பள்ளி நிர்வாகம் பெற்றோரை அழைத்து மாற்றுச் சான்றிதழை பெற்றுச் சென்று வேறு பள்ளியில் சேர்க்குமாறு கூறியதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து மாணவியை உசிலம்பட்டி அரசு பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக ஆலோசனை பெறுவதற்காக, மாணவியும் அவரது தாயாரும் பள்ளிக்குச் சென்றுள்ளனர். அப்போது தலைமையாசிரியரிடம் அவரது தாயார் பேசிக் கொண்டிருந்த நிலையில், தலைமையாசிரியை முன்பு கை கட்டி நின்றதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த மாணவி, தனது தாயின் கையை தட்டிவிட்டு கை கட்டி நிற்க வேண்டாம் என தடுத்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தலைமையாசிரியை, ஏன் உங்க அம்மா கை கட்டி பதில் சொன்னால் உனக்கு என்ன? என மாணவியை முறைத்துப் பார்த்து, பற்களைக் கடித்தபடி கோபமாக பேசியதாக மாணவியின் தாயார் புகாரில் தெரிவித்துள்ளார். இதனால் பயந்துபோன மாணவி அங்கேயே நின்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், தலைமையாசிரியை, இப்போது என்னிடம் இவ்வளவு திமிராக நடந்து கொள்கிறாய். மற்ற பள்ளிகளிலும் இப்படித்தான் நடந்திருப்பாய். அதனால்தான் உன்னை அந்த பள்ளியை விட்டு வெளியேற்றி உள்ளார்கள் என கூறியதுடன், வெளியே போடி என்று அதட்டியதாகவும் தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி பள்ளியிலிருந்து வெளியே ஓடி வந்துள்ளார். பின்னர் நடந்தே நல்லமாள்பட்டி வரை சென்றுள்ளார். மகளை தேடி இருசக்கர வாகனத்தில் சென்ற தாயார், சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் மாணவி தனியாக நடந்து சென்று கொண்டிருந்ததை பார்த்து, ஆட்டோவில் அழைத்து வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

அன்று இரவு மாணவி உணவு சாப்பிடாமல் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.

மறுநாள் ஏற்கனவே படித்த அரசு கள்ளர் பள்ளிக்குச் சென்ற மாணவி மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொண்டு வந்துள்ளார். அன்று மாலை சுமார் 4 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி தற்கொலை தொடர்பாக உசிலம்பட்டி தாலுகா போலீசார் முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், தனது மகள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தலைமையாசிரியை சாதிய ரீதியாக இழிவுபடுத்தியதாகவும், தாயாரை பிறர் முன்பு கை கட்டி நிற்க வைத்த சம்பவத்தை பார்த்து மாணவி மனவேதனை அடைந்ததாகவும், அதன்பின்னர் தலைமையாசிரியை பேசிய விதத்தால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் மாணவியின் தாயார் புகார் அளித்துள்ளார்.

என் அம்மா ஏன் மற்றவர்கள் முன்பு கை கட்டி நிற்க வேண்டும்? என்ற வேதனையில் தனது மகள் இருந்ததாகவும், சாதிய பாகுபாட்டை தாங்க முடியாமலும், தலைமையாசிரியரின் பேச்சால் ஏற்பட்ட அவமானத்தாலும் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் பெற்றோர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில், அரசு பள்ளி தலைமையாசிரியை விமலாதேவி மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *