வேலூர்/ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு வாகனத்திற்கு நள்ளிரவில் தீ வைத்த நபரை, காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 12 மணி நேரத்திற்குள் கைது செய்தனர். பிடிபட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் கூறப்படுவதாவது:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு பணிகள் முடிந்த பிறகு, வட்டாட்சியரின் அரசு பயன்பாட்டு வாகனம் அலுவலக வளாகத்தில் வழக்கம்போல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நள்ளிரவு சுமார் 12 மணியளவில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், திடீரென வட்டாட்சியரின் வாகனத்திற்கு தீ வைத்துள்ளார். கார் எரியத் தொடங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக தீயை அணைக்க முயன்றனர். எனினும், இந்த தீ விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்தது. இதுகுறித்து உடனடியாக வாலாஜா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிசிடிவி காட்சிகள் மூலம் துப்புதுலக்கல்: அரசு அலுவலக வளாகத்திற்குள் வட்டாட்சியரின் காரே தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜா காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையின் முதற்கட்டமாக, வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வட்டாட்சியர் வாகனத்தின் அருகே நடமாடுவதும், பின்னர் காரை தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடும் காட்சிகளும் கேமராவில் பதிவாகியிருந்தது உறுதி செய்யப்பட்டது.
12 மணி நேரத்தில் நடவடிக்கை: சிசிடிவி பதிவில் கிடைத்த நபரின் அடையாளங்களை வைத்து, காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள், தீ வைப்பில் ஈடுபட்ட நபரின் இருப்பிடத்தை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
விசாரணையில், அவர் வாலாஜா ரஃபிக் நகர், திரௌபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர்.
காப்பகத்தில் அனுமதி: கைது செய்யப்பட்ட செந்தில்குமாரிடம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாகவும், தெளிவற்ற நிலையிலும் பேசியுள்ளார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கடந்த சில காலமாகவே கடுமையான மனநல பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவது உறுதி செய்யப்பட்டது.
அவர் திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபடவில்லை என்பதும், மனநல குறைபாடு காரணமாகவே வாகனத்திற்கு தீ வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சட்டப்பூர்வ நடைமுறைகளுக்குப் பின், செந்தில்குமாரை சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்காக அரசு அங்கீகாரம் பெற்ற மனநல காப்பகம் ஒன்றில் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
அரசு வாகனத்திற்கு தீ வைக்கப்பட்ட வழக்கில், எவ்வித அசம்பாவிதமும் இன்றி, சிசிடிவி துப்பு துலக்கல் மூலம் 12 மணி நேரத்திற்குள் குற்றவாளியை விரைந்து கண்டறிந்த வாலாஜா காவல் துறையினரை மாவட்ட உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
