வேலூரில் ஏற்பட்ட வாய்த்தகராறில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த இருவர் தங்களது நண்பரையே கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் படுகாயமடைந்த நபர் தற்போது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தீபக் (35). இவர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமர்ந்து, பொதுமக்களுக்கு கோரிக்கை மனுக்களை எழுதிக் கொடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். நேற்று இரவு இவர் அரசமரப்பேட்டையில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தார்.
நள்ளிரவு நேரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த தீபக்கின் நண்பர்களான பிரசன்னா மற்றும் தீபக் ராஜ் ஆகியோர் அங்கு வந்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்த இவர்கள் இருவரும், சம்பவத்தின் போது முழு மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தங்களுக்கு இன்று பிறந்தநாள் என்றும், அதை ஒன்றாகக் கொண்டாட வேண்டும் என்றும் கூறி தீபக்கை தங்களுடன் வருமாறு அவர்கள் அழைத்துள்ளனர்.
ஆனால், நள்ளிரவு நேரமாகிவிட்டதால் வீட்டில் திட்டுவார்கள் எனக் கூறி அவர்களுடன் செல்ல தீபக் மறுத்துள்ளார். இதனால் நண்பர்களுக்கு இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த பிரசன்னாவும் தீபக் ராஜும் சேர்ந்து தீபக்கின் வாயைப் பொத்தி, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைச் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
தீபக்கின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய இருவரையும் தீவிரமாகத் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
