திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஜெராக்ஸ் மெஷினில் கள்ள நோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்ட கணவன், மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பல்லடம் அருகே சேடபாளையம் பகுதியில் உள்ள ஜோதி என்பவரது மளிகை கடையில் நேற்று இரவு கடை அடைக்கும் போது ரூபாய் நோட்டுக்களை எண்ணி உள்ளார்.
அப்போது அசல் ரூபாய் நோட்டு போல ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட போலியான ரூபாய் நோட்டு இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஜோதி பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் விரைந்து வந்த பல்லடம் போலீசார் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது ஜெயசக்தி என்ற பெண் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட போலியான ரூபாய் நோட்டை கொடுத்து பொருட்கள் வாங்கி சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவரை பிடித்து விசாரித்த போது அவரது கணவர் ராஜாவும் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது மேலும் தொடர்ந்து விசாரித்த போது ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் ஜெராக்ஸ் மெஷின் மூலம் சரியான அளவு எடுத்து ரூபாய் நோட்டுக்களை பிரிண்ட் எடுத்துக் கொடுப்பதாகவும் அதனை பெற்று ராஜா தனது மனைவியிடம் கொடுத்து புழக்கத்தில் விட முயன்ற போது மாட்டிக்கொண்டதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 65 ஆயிரத்து 600 ரூபாய் போலியான ஜெராக்ஸ் பணம் மற்றும் பிரிண்ட் எடுக்க பயன்படுத்திய இயந்திரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
