ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆம்பூர் அடுத்த பாங்கிஷாப், திப்பு சுல்தான் ஆட்டோ ஸ்டாண்ட் நிறுத்தப் பகுதியில் இளைஞர்களைக் குறிவைத்து தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக திருப்பத்தூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆய்வாளர் நந்தினி தேவி தலைமையில், உதவி ஆய்வாளர் அஜித் உள்ளிட்ட போலீசார் பாங்கிஷாப் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோ ஸ்டாண்ட் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒரு இருசக்கர வாகனத்தை (ஸ்கூட்டி) போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது, வாகனத்தின் சீட்டிற்கு அடியில் (Seat storage) சிறிய அளவிலான பொட்டலங்களாக கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் ஆம்பூர் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 26) என்பது தெரியவந்தது. பொதுமக்க நடமாட்டம் அதிகமுள்ள ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியிலேயே அவர் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததை போலீசார் உறுதி செய்தனர்.
இதையடுத்து ராஜேஷை கைது செய்த போலீசார், அவரை வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வரப்பட்டு, ஆம்பூர் மற்றும் பாங்கிஷாப் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களைக் குறிவைத்து தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட ராஜேஷிடம் இருந்து 20 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது மதுவிலக்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து இவருக்கு கஞ்சா சப்ளை செய்யும் முக்கிய குற்றவாளிகள் யார், இந்த கடத்தல் பின்னணியில் உள்ள பெரிய கும்பல் மற்றும் ஆம்பூர் பகுதியில் இவருடன் தொடர்பில் உள்ள இதர நபர்கள் யார் என்பது குறித்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
