உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ரூ. 2 கோடி செலவு செய்ய வேண்டும், என்னைக் கேட்காமல் ஏன் எம்எல்ஏ வை பார்க்கச் செல்கிறாய், அனைவரையும் ஏணி போல் தூக்கிவிட்டு நான் வேடிக்கை பார்ப்பதா என தவெக திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.கே.சங்கர் , ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியனிடம் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இரண்டு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தமிழக வெற்றி கழகத்தின் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆக ஜி கே சங்கர் பொறுப்பு வகித்து வருகிறார். பல்லடத்தைச் சேர்ந்த இவர் உடுமலை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பல்லடம் தொகுதிக்கு ராம்குமார் என்பவரை தவெக சார்பில் போட்டியிட பரிந்துரைத்திருந்தார் அவர் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது எம்எல்ஏவாக உள்ளார்.
தற்பொழுது கட்சி நிர்வாகிகள் மாவட்டச் செயலாளராக உள்ள தன்னை விடுத்து நேரடியாக எம்எல்ஏவை பார்க்கச் செல்வதாக அதிருப்தியில் ஜி கே சங்கர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஒன்றிய செயலாளராக உள்ள பாலசுப்பிரமணி என்பவர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு ஜிகே சங்கரை அணுகி உள்ளார்.
ஆனால் என்னை பார்க்காமல் நீ எம்எல்ஏ வை பார்க்க சென்று விடுகிறாய் கட்சிக்காக பணி செய்ய வந்தாயா எம்எல்ஏவுக்கு பணி செய்ய வந்தாயா? என கேட்டு அவரை கடுமையாக திட்டியதுடன் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஒரு கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும் உன்னால் முடியாது வாய் வார்த்தைகளை நான் நம்ப மாட்டேன் என பேசும் ஆடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கேட்டபோது பல்லடம் எம்எல்ஏவுக்கும் தனக்கும் எந்த விதமான மனக்கசப்பும் இல்லை எனவும் கட்சிப்பணி செய்யாததால் தான் அவ்வாறு பேசியதாகவும் மற்ற கட்சிகள் 2 கோடி வரை உள்ளாட்சி தேர்தலில் செலவு செய்வார்கள் அதனால் உன்னால் முடியாது என கூறியதாகவும் அதனை பலமுறை எடிட் செய்து உள்நோக்கத்துடன் வெளியிட்டுள்ளார்கள் என ஜி கே சங்கர் விளக்கமளித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட செயலாளர் ஜிகே சங்கர் ஆட்கள் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு கோரி பாலசுப்ரமணியம் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதேபோல மாவட்டச் செயலாளர் ஜிகே சங்கர் தரப்பிலிருந்தும் சிலர் உள்நோக்கத்துடன் வேண்டுமென்று எடிட் செய்யப்பட்ட ஆடியோவை ஒளிபரப்பி அவப்பெயர் ஏற்படுத்த முயல்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
