முதல்வரின் பதிலுரையின் போது எதிர்கட்சிகள் யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது என்று முதலமைச்சர் விஜய் பேசியதை விமர்சித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டசபையில் சினிமா வசனம் பேசுவது மக்களுக்கு உகந்தது அல்ல என தெரிவித்தார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் காந்தி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது என்று முதலமைச்சர் பேசுவதற்கு, அவர் என்ன கையில் அரிவாள் கம்பு உடன் வருகிறாரா?. அப்படி என்ன பேசப்போகிறார் விஜய் ?. ஏற்கனவே சட்டமன்றத்தில் முதலமைச்சர் எதுவும் பேசுவதில்லை என்றார்.
தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
அதற்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும். சிறு குழந்தைகள் பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அது தொடர்பாக முதலமைச்சர் பேசப்போகிறாரா? என கேள்வி எழுப்பினார்.
இல்லையெனில் கோவையில் நடந்த படுகொலை போல பல இடங்களில் நடந்துள்ளது அது தொடர்பாக பேசப் போகிறாரா? சட்டசபையில் சினிமா வசனம் பேசுவது உகந்ததல்ல என தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளர் என்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது.
நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான கேள்விக்கு, ஆம் தமிழ்நாட்டில் தமிழ் தான் இருக்க வேண்டும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்று கூறினார்.
தூய்மை பணியாளர்களின் எல்லா சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்போதுதான் தீர்வு கிடைக்கும். ஒரு சங்கத்தை மட்டும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது.
விவசாயிகளுக்கு இன்னும் முழுமையாக கடன் தள்ளுபடி செய்யவில்லை. மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ஆம் தேதி திறந்து வைத்திருக்க வேண்டும். கடந்த வாரம் தான் திறந்து விடப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் மேட்டூர் சென்றதற்கு மட்டும் ஐந்து கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
மின்சார கட்டணம் தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது. அதற்கு அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை என தெரிவித்தார்.
