கோவை, மே 25 : காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீசி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 31 குற்ற வழக்குகள் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த ரவுடி உட்பட நான்கு பேரை தொண்டாமுத்தூர் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தபோது சென்னையைச் சேர்ந்த கார்த்திக் (என்ற) மாரியப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இவர்களது பழக்கம் இயல்பாக இருந்த நிலையில், கார்த்திக்கின் பின்னணி குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்துள்ளன. கார்த்திக் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 31-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்ததையடுத்து, அந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதன் காரணமாக கார்த்திக்குடனான தொடர்பை அவர் முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அவரது அழைப்புகளைத் தவிர்த்ததுடன், பேசுவதையும் நிறுத்தியுள்ளார். ஆனால், இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாத கார்த்திக், கடந்த சில நாட்களாகவே அந்தப் பெண்ணுக்குத் தொடர்ந்து பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மீண்டும் தன்னுடன் பழக வேண்டும் என்று வற்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது.
இதன் தொடர்ச்சியாக, நேற்று மாலை கார்த்திக் தனது நண்பர்கள் மூன்று பேருடன் ‘கேடிஎம்’ மற்றும் ‘பல்சர்’ ஆகிய இருசக்கர வாகனங்களில் கலிக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணின் தந்தையை, கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அங்கிருந்தவர்கள் சத்தமிட்டதைத் தொடர்ந்து, கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பீர் மற்றும் மதுபான பாட்டில்களை வீட்டின் மீது சரமாரியாக வீசத் தொடங்கினர். இதில் வீசப்பட்ட ஒரு பாட்டில் வெடித்து சிதறியதில், வீட்டின் முன்பகுதி (போர்டிகோ) வராண்டாவில் வைக்கப்பட்டிருந்த செருப்பு ஸ்டாண்ட் மீது தீப்பிடித்தது. இந்தத் தீ விபத்தில் அங்கிருந்த காலணிகள் மற்றும் கேன்வாஸ் ஷூக்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
சம்பவம் நடந்த சமயத்தில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டதால், நிலைமை மோசமாவதை உணர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் தங்களது வாகனங்களில் ஏறி அங்கிருந்து தப்பியோடினர். இந்தத் திடீர் தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர். நல்வாய்ப்பாக, பாட்டில்கள் வீசப்பட்ட போது குடும்பத்தினர் அனைவரும் வீட்டின் உள்பகுதியில் இருந்ததால் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
இச்சம்பவம் குறித்து இளம்பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாகத் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தப்பிச் சென்ற பாதையில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளைச் சேகரித்து, போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 31 வழக்குகள் உள்ள ஒரு ரவுடி, பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் புகுந்து அராஜகத்தில் ஈடுபட்ட இச்சம்பவம் தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
