Coimbatore May 24: கோவை பெரிய கடை வீதியில் உள்ள நகைக் கடை ஒன்றில், வாடிக்கையாளர் போல வந்து நைசாக வெள்ளி கொலுசைத் திருடிச் சென்ற பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கோவையின் மிக முக்கிய வர்த்தக மையமான பெரிய கடை வீதி பகுதியில் ‘பிரண்ட்ஸ் ஜுவல்லரி’ என்ற நகைக் கடை செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் வியாபார நடைமுறைகள் நடந்து கொண்டிருந்த வேளையில், கடைக்கு வந்த பெண் ஒருவர் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து ஊழியர்களிடம் வெள்ளி கொலுசு மாடல்களைக் காட்டுமாறு கேட்டுள்ளார்.
ஊழியர்களும் அந்தப் பெண்ணிற்குப் பல்வேறு வடிவமைப்புகளில் இருந்த கொலுசுகளை எடுத்துக் காண்பித்துள்ளனர். அப்போது, ஊழியர்களின் கவனம் சற்று திசை திரும்பிய நொடிகளைப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் பெண், தனது கையில் வைத்திருந்த சுமார் 40 கிராம் எடையுள்ள ஒரு ஜோடி வெள்ளி கொலுசை மிகவும் சாதுரியமாக மறைத்து, தனது சேலைக்குள் சொருகிக் கொண்டார்.
பின்னர், தனக்கு நகைகள் எதுவும் பிடிக்காதது போலக் காட்டிவிட்டு அங்கிருந்து இயல்பாக வெளியேறியுள்ளார். அதன் பிறகு நகைகளைச் சரிபார்த்த கடை ஊழியர்கள், ஒரு ஜோடி கொலுசு காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கடையிலிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்தப் பெண் வாடிக்கையாளர் போல அமர்ந்து கொண்டே மிக லாவகமாக நகையைத் திருடியது வெளிச்சத்திற்கு வந்தது. இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, அப்பகுதி வியாபாரிகளிடையே அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துப் புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
