திருப்பத்தூர்மாவட்டம் வேலூர் : திருப்பத்தூர் அருகே சமையல் எண்ணெய் வாங்குவது போல பிளாஸ்டிக் பையில் சாராயம் கடத்தி வந்த மூதாட்டி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் அவர்களுக்கு சாராயம் சப்ளை செய்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 4 பேரை திருப்பத்தூர் கிராமிய போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 20 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போலீசார் வாகன சோதனை:
திருப்பத்தூர் மாவட்டம், ராச்சமங்கலம் பகுதியில் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய போலீசார் இன்று (மே 24) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண் மற்றும் வாலிபரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், அவர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் பையை போலீசார் சோதித்தனர். அப்போது, வீட்டிற்கு சமையல் எண்ணெய் வாங்கிச் செல்வது போல, 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் பையில் சாராயத்தைக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்:
இதையடுத்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அம்பலூர் அடுத்த தும்பேரி ஏரிக்கொல்லி பகுதியைச் சேர்ந்த சாமுராஜ் என்பவரின் மனைவி சாந்தி (42) மற்றும் அவரது மகன் விக்னேஷ் (23) என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் ஆந்திர மாநிலம் குப்பம் அருகேயுள்ள அரிமணிபெண்டா பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் இருந்து இந்த சாராயத்தை வாங்கி வந்துள்ளனர். இதனை ராச்சமங்கலம் பகுதியில் வசிக்கும் சாந்தியின் தாயாரான ராஜாமணி (65) என்பவரிடம் சில்லறை விற்பனைக்காகக் கொடுக்க முயன்றபோது போலீசாரிடம் சிக்கியதும் விசாரணையில் அம்பலமானது.
4 பேர் சிறையிலடைப்பு:
இதையடுத்து, சாராயம் கடத்திய சாந்தி, விக்னேஷ், அதற்கு உடந்தையாக இருந்த மூதாட்டி ராஜாமணி மற்றும் சாராயம் சப்ளை செய்த ஆந்திராவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேர் மீதும் திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் சமையல் எண்ணெய் என்ற பெயரில் பிளாஸ்டிக் பையில் சாராயம் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
