30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை துரிதமாக செயல்பட்டு சுரண்டை தீயணைப்பு துறையினர் மீட்ட சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.
தென்காசி மாவட்டம், துவரங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பஞ்சாயத்து தெருவைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மனைவி உடையம்மாள் (வயது 65). இவர் எதிர்பாராதவிதமாக இன்று அதிகாலையில் அப்பகுதியில் உள்ள சுமார் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக சுரண்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், துரிதமாக மீட்புப் பணியில் இறங்கினர். நிலைய அலுவலர் ரமேஷ், சிறப்பு நிலைய அலுவலர் ரவீந்திரன் ஆகியோரின் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் திருமலை, கணேசன், சமுத்திரபாண்டி மற்றும் செல்வம் ஆகியோர் கிணற்றுக்குள் இறங்கி சாதுரியமாகச் செயல்பட்டனர். சுமார் 30 அடி ஆழக் கிணற்றில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மூதாட்டி உடையம்மாளை எவ்வித காயங்களுமின்றி பத்திரமாக உயிருடன் மீட்டுக் கரை சேர்த்தனர்.
தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே விரைந்து செயல்பட்டு, மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றிய சுரண்டை தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
