Headlines

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : கணக்கில் வராத பணம் பறிமுதல்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : கணக்கில் வராத பணம் பறிமுதல்

விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று 6 மணி நேரத்திற்கு மேலாக நடந்த லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.58,810 பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை 3.30 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி தலைமையில் 11 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் நகராட்சி அலுவலகத்திற்குள் சென்று சோதனையை தொடங்கினர்.

அப்போது அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் யாரும் வெளியே செல்ல முடியாத வகையில் அலுவலகக் கதவுகள் உள்புறமாக பூட்டப்பட்டு சோதனை நடைபெற்றது.

வருவாய், சுகாதாரம், பொறியியல், நில அளவை, துப்புரவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் உள்ள அறைகள், பீரோக்கள், மேஜை டிராயர்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

மேலும், முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, பெயர் மாற்றம், கட்டிட வரி, சொத்து வரி, வீட்டு அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை இரவு 10.15 மணியளவில் நிறைவடைந்தது. சோதனையில் ரூ.58,810 கணக்கில் வராத பணம் சிக்கியது.
அந்த பணத்திற்கு உரிய கணக்கு காட்டப்படாததால், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், நகராட்சி அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் சிலவற்றையும் போலீசார் கைப்பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய இந்த அதிரடி சோதனை, நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *