Headlines

சேலத்தில் போதை மாத்திரை சப்ளை : மருந்துக்கடை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது

சேலத்தில் போதை மாத்திரை சப்ளை : மருந்துக்கடை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது

சேலம் மாநகரில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த 40-க்கும் மேற்பட்டோரை கடந்த ஒரு மாதத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 40,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் போதை மாத்திரை விற்பனையை காவல்துறையினரால் கட்டுப்படுத்த இயலவில்லை.

இந்நிலையில் சேலம் மாநகரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

காவல் உதவி ஆய்வாளர்கள் தமிழ்வாணன் மற்றும் நவநீதகுமார் ஆகியோர் தலைமையில் விசாரணை நடத்தி வந்த தனிப்படை போலீசாருக்கு சேலம், தாதகாப்பட்டியில் செயல்படும் சுகம் மெடிக்கல் ஷாப் என்ற மருந்து கடையிலிருந்து மாத்திரைகள் சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

அதிலும் மூன்று ரூபாய் 50 பைசா மதிப்புள்ள மாத்திரைகளை, 350 ரூபாய்க்கு விற்பனை செய்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து
நேற்று இரவு 7 மணிக்கு கடைக்குள் புகுந்து காவல்துறையினர் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் 8,600 போதை மாத்திரைகள் கண்டறியப்பட்டது. இவற்றின் மதிப்பு வெளி மார்க்கெட் விலையில் பல லட்சம் என சொல்லப்படுகிறது

இந்த மாத்திரைளை பறிமுதல் செய்த காவல்துறையினர் மருந்து கடையின் உரிமையாளர் சுகுமார் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த திருச்சி மெயின் ரோட்டை சேர்ந்த முகமது இஸ்மாயில் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
மேலும் மருந்து கடையை பூட்டி காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர்.

இவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் 30 க்கும் மேற்பட்ட சிறிய வியாபாரிகளுக்கும், நூற்றுக்கணக்கான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் விற்பனை செய்ததை ஒப்பு கொண்டுள்ளனர்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் சில்லறை வியாபாரிகள் பட்டியலை தயார் செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *