Headlines

நேபாளத்தில் திடீர் வெள்ளம் : தமிழக சுற்றுலா பயணிகளின் நிலை என்ன?

நேபாளத்தில் திடீர் வெள்ளம் : தமிழக சுற்றுலா பயணிகளின் நிலை என்ன?

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 57 சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் தவித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களில் 20 பேர் தொடர்பில் உள்ள நிலையில், 37 பேரின் நிலவரம் குறித்து தகவல்கள் இல்லாததால் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

நேபாளத்தில் திடீர் வெள்ளம் : தமிழக சுற்றுலா பயணிகளின் நிலை என்ன?நேபாளத்தில் திடீர் வெள்ளம் : தமிழக சுற்றுலா பயணிகளின் நிலை என்ன?

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு

நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன.

ஆன்மிக யாத்திரை சென்ற தமிழக பயணிகள்

முக்திநாத் உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கும் பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கும் பயணமாகியிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 பயணிகள், போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் நடுவழியில் தவித்து வருகின்றனர்.

மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை உறுதி செய்யவும் இந்திய வெளியுறவு அமைச்சகத்துடன் தமிழ்நாடு அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது.

நேபாளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 57 பயணிகளும் கும்பகோணம் சூப்பர் யாத்திர ஏஜென்சி மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் திருச்சி, சென்னை, சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், பாண்டிச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர், ஓசூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

கடந்த 23ஆம் தேதி மூன்று வேன்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நேபாளம் சீனா எல்லை அருகே சென்று கொண்டிருந்தபோது வெள்ளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வேன்களும் சிக்கி உள்ளன.

37 பேரின் நிலை என்ன?

தமிழக சுற்றுலா பயணிகளில் ஒரு வேனில் பயணம் செய்த 20 பேர் தப்பித்து கரை ஒதுங்கி உள்ளனர். மீதமுள்ள இரண்டு வேன்களில் பயணம் செய்த 37 பேர் நிலைமை என்னவென்று தெரியவில்லை.

தற்போது சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற ஏஜென்சியை அவர்களது உறவினர்கள் தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர்.

சுற்றுலா ஏஜென்சி உரிமையாளர் கூறுவதென்ன?

பயணிகளை அழைத்து சென்ற கும்பகோணம் சூப்பர் யாத்ரா ஏஜென்சி உரிமையாளர் சாதிக் கூறுகையில்,

எங்கள் சுற்றுலா ஏஜென்சி மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 57 பேர் விமான மூலம் நேபாளம் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு 13 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புறப்பட்ட அவர்கள் மூன்று பேருந்துகளில் இரண்டு நாள் நேபாளத்தில் சுற்றிவிட்டு இன்று காலை தான் எல்லை விட்டு திபெத் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த இயற்கை பேரிடர்களில் சிக்கி உள்ளனர். மூன்று பேருந்துகளில் சென்று உள்ளவர்களில் ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாகவும் தன்னை தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். மேலும் இரண்டு பேருந்துகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதில் 37 பேர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் உமர் பாரூக் தலைமையில் சுற்றுலா சென்றுள்ளதாகவும் மேலும் தனது மகன் கூட தன்னை தொடர்பு கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார்.

தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம் – வட்டாச்சியர்

கும்பகோணம் வட்டாச்சியர் பூங்கொடி கூறுகையில், 57 பயணிகளில் 16 பேர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். மூன்று பேருந்துகளில் முதல் பேருந்து பத்திரமாக சென்ற நிலையில் , பின்னால் வந்த மற்ற இரண்டு பேருந்துகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. அங்கு பத்திரமாக உள்ளவர்களை தொடர்பு கொண்டு வருகிறோம். செல்போன் சிக்னல் கிடைக்காததால் அங்கு உள்ளவர்களை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *