மானாமதுரை அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆகாஷ் டெலிஷன் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மானாமதுரை காவல் ஆய்வாளர் திலீபன், சார்பு ஆய்வாளர் குகன் உள்ளிட்ட 6 காவலர்கள் மீது கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் டெலிஷன். கடந்த மார்ச் 5ஆம் தேதி நள்ளிரவு மானாமதுரை சீயோன் நகர் பகுதியில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆகாஷ் டெலிஷனை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மார்ச் 8ஆம் தேதி உயிரிழந்தார்.
ஆகாஷ் டெலிஷன் மரணத்தில் காவல்துறையினர் மீது சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தொடர்ந்து குற்றம்சாட்டி, நடவடிக்கை கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
சிபிசிஐடி விசாரணையின் அடிப்படையில் கடந்த ஜூன் 18ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட 68 நாட்களுக்கு பின் அதன் நகல் ஆகாஷின் குடும்பத்தினருக்கு நேற்று வழங்கப்பட்டது.
12 பக்கங்கள் அடங்கிய அந்த குற்றப்பத்திரிக்கையில்,ஆகாஷ் டெலிஷனை மானாமதுரை அருகே யூகலிப்டஸ் மரங்கள் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று இரும்புக் கம்பியால் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வலது காலில் முழங்காலுக்கு கீழ்பகுதி மற்றும் கணுக்காலுக்கு மேல்பகுதியில் தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காயங்களின் விளைவாக ஏற்பட்ட கொழுப்பால் இரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு ஆகாஷ் டெலிஷன் உயிரிழந்ததாக மருத்துவக் காரணமும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரும்புக் கம்பியை மறைத்து வைத்ததாகவும், ஆகாஷ் போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்லும்போது கீழே விழுந்து காயமடைந்ததாக தவறான தகவல் பதிவு செய்யப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் திலீபன், சார்பு ஆய்வாளர் குகன் மற்றும் காவலர்கள் மகேந்திரன், காளீஸ்வரன், தெய்வேந்திரன், பழனியப்பன் ஆகிய 6 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகாஷ் டெலிஷன் மரணம் தொடர்பான சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தற்போது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர்கள் மீது அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எப்போது மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
