புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.
மாநில அந்தஸ்து கிடைக்கும் என்றால், சட்டப்பேரவையை ஒத்திவைத்து டெல்லி சென்று மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்கு தான் தயாராக இருப்பதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்எல்ஏ ஜான்குமார் , “முதல்வர் நம்மை அழைத்துக்கொண்டு டெல்லி சென்றால், இரண்டு வாரத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ரங்கசாமி, “ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் அவசியம். அதிகாரம் இருந்தால்தான் மாநிலம் வளர்ச்சி பெறும். மாநில அந்தஸ்து கிடைக்கும் என்றால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவும் தயார். எல்லா நிலைக்கும் நான் தயார்” என அதிரடியாக அறிவித்தார்.
மாநில அந்தஸ்து தொடர்பாக பேசிய தற்காலிக சபாநாயகர் அன்பழகன், “புதுச்சேரி பயங்கரவாத தாக்குதல் நடைபெறும் பகுதியோ, இயற்கை சீற்றத்தால் தொடர்ந்து பாதிக்கப்படும் பகுதியோ அல்லது மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலையிலோ இல்லை. எனவே சிறப்பு மாநில அந்தஸ்தை விடுத்து மாநில அந்தஸ்து என்ற ஒரே கோரிக்கையில் இருங்கள் என ஜான்குமார் எம்எல்ஏக்கு பதிலளித்தார்.
அப்படியிருக்க, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “எவ்வளவு நாள் தான் மக்களை ஏமாற்ற முடியும்? நமக்கு மாநில அந்தஸ்து தான் தேவை” என அன்பழகன் வலியுறுத்தினார்.
அப்போது ஜான்குமார் எம்எல்ஏ பலமுறை கேட்டும் மாநில அந்தஸ்து இன்னும் கிடைக்கவில்லை என கூறியதற்கு
மாநில அந்தஸ்து வழங்க பாஜக தடுக்கிறதா…? என தற்காலிக சபாநாயகர் அன்பழகன் கேட்டதற்கு கட்சி நிகழ்வுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் எனவும் சபையை தவறாக வழி நடத்தக்கூடாது என சபாநாயகருக்கு உள்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்தார்.
தொடர்ந்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக ஆளும் தரப்பு எம்எல்ஏக்கள் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோர் ஒரே குரலில் வலியுறுத்திய நிலையில், முதல்வர் ரங்கசாமியின் “எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவும் தயார்” என்ற அறிவிப்பு சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
