வில்லிவாக்கத்தில் பிறந்து 2 நாட்களேயான பெண். குழந்தை ஆந்திர தம்பதிக்கு விற்கப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் தாய் உட்பட 4 பெண்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி பிறந்த பெண் குழந்தையை ஆந்திர தம்பதிக்கு விற்றதாக சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு( வடக்கு) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு- சமூகப் பணியாளர் மலர்விழி வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில்,
கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பவித்ரா (வயது 19) இரண்டாவதாக தனக்கு பிறந்த பெண் குழந்தையை இடைத்தரகர்கள் உதவியுடன் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணேச மூர்த்தி -செல்வரசி தம்பதியினருக்கு ரூபாய் 4 லட்சத்துக்கு விற்றது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில் பவித்ராவின் கணவர் கணேஷ்@ குள்ள கணேஷ் குற்ற வழக்கில் கைதாகி கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக புழல் சிறையில் உள்ளார்.
ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் கணவர் சிறை செல்லும் போது இரண்டாவதாக முறையாக கர்ப்பம் தரித்திருந்தார்.
கணவர் சிறையில் இருப்பதால் உணவிற்கு வழியின்றி மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் அயனாவரத்தைச் சேர்ந்த ஆண்டாள் (64) கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த தனலட்சுமி(26) ஆகியோரிடம் தனது கஷ்டமான சூழ்நிலையை சொல்லி பவித்ரா அழுது புலம்பியுள்ளார்.
அப்போது ஆண்டாள் தனக்கு தெரிந்த ஆந்திர தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை.
எனவே இரண்டாவதாக உனக்கு பிறக்கும் குழந்தையை அந்த தம்பதிக்கு கொடுத்து விடலாம். 4 லட்ச ரூபாய் பணம் வாங்கி தருகிறேன்.
பிரசவத்துக்கான செலவையும் ஆந்திர தம்பதியே ஏற்றுக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.
அதன்படி வில்லிவாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றும் துர்காவிடம், பவித்ராவின் முழு விவரத்தையும் தெரிவித்ததுடன், குழந்தை பிறந்த சில தினங்களில் ஆந்திர தம்பதிக்கு கொடுக்க வேண்டும். எதுவும் சிக்கல் வராமல் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என ஆண்டாளும், தனலட்சுமி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பிரசவ வலி ஏற்படவே பவித்ராவை அழைத்து வந்து தனலட்சுமி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். கடந்த 18ஆம் தேதி பவித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
மறுநாளே நான்கு லட்சம் பணத்தை வாங்கிக் கொண்ட பவித்ரா, மருத்துவமனை வரவேற்பாளர் துர்கா இடைத்தரகர்கள் ஆண்டாள், தனலட்சுமி ஆகியோர் முன்னிலையில் குழந்தையை ஆந்திர தம்பதியிடம் ஒப்படைத்துள்ளார்.
மருத்துவமனை வரவேற்பாளர் துர்கா இடைத்தரகர் ஆண்டாள் ஆகியோருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் கமிஷனாக பவித்ரா கொடுத்துள்ளார்.
ஆனால் தனலட்சுமிக்கு கமிஷன் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர், குழந்தை விற்பனை விவகாரத்தை கசிய விட்டுள்ளார் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.
மருத்துவமனை நிர்வாகத்திற்கு குழந்தை விற்பனை குறித்து தெரியும் என இடைத்தரகர்கள் விசாரணையின் போது கூறியுள்ளனர்.
அவர்கள் தெரிவித்த தகவலின் உண்மைத்தன்மை குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோதமாக குழந்தையை விற்றது தொடர்பாக ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த வில்லிவாக்கம் போலீசார் குழந்தையின் தாய் பவித்ரா, இடைத்தரகர்கள் ஆண்டாள் ,தனலட்சுமி மருத்துவமனை வரவேற்பாளர்
ராயப்பேட்டையைச் சேர்ந்த துர்கா ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர தம்பதியிடம் உள்ள குழந்தையை மீட்ட போலீசார் அவர்களை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டாள் தனலட்சுமி,துர்கா மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் இணைந்து இதற்கு முன்னர் சட்டவிரோத குழந்தை விற்பனையில் ஈடுபட்டுள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
