சிவகாசியில் தனது வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் வெளியே வந்து தொல்லை கொடுத்த வாலிபரை வெட்டி கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சிவகாசி விஜயலட்சுமி காலனியில் வசித்து வசிப்பவர் மருதாயி (வயது 38). இவரது கணவர் சோனை முத்து இறந்துவிட்ட நிலையில், இவருக்கு திருமணமான ஒரு மகளும், 16- வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த மே மாதம் மருதாயி தனது வீட்டில் அனுப்பன்குளம் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரி, திலகம் உள்ளிட்ட தோழிகளுடன் இருந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் மருதாயி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, ஆயுதங்களைக் காட்டி மிரட்டியதுடன், ஈஸ்வரியை கத்தியால் தலையில் தாக்கி அவர்களிடமிருந்த 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க தோடு, வெள்ளிக்கொலுசு, செல்போன்கள் மற்றும் 7- ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக மருதாயி அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகாசி காளியம்மன் கோவில் பழைய தெருவைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் தங்க முனீஸ்வரன் (வயது 26) உள்ளிட்ட அவரது நண்பர்கள் 6 பேரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்த வழக்கில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்த தங்க முனீஸ்வரன் சிவகாசி கிழக்குக் காவல் நிலையத்தில் ஆஜராகி தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
இதற்கிடையே ஜாமினில் வெளிவந்துள்ள தங்கமுனீஸ்வரன் தான் சிறைக்குச் செல்ல காரணமாயிருந்த, விஜயலட்சுமி காலனியிலுள்ள மருதாயியின் வீட்டிற்கு தினமும் சென்று அவரிடம் பிரச்சனை செய்து வந்ததுடன் அவருக்கு பாலியல் ரீதியான தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மருதாயி தங்க முனீஸ்வரனை தனது வீட்டிற்கு வரவழைத்ததுடன், தங்க முனீஸ்வரன் தனது வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் நுழைவு வாயிலேயே அவரது கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவியுள்ளார். இதன் காரணமாக நிலைதடுமாறிய தங்க முனீஸ்வரனின் கழுத்தில் மருதாயி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தங்க முனீஸ்வரன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலமையிலான போலீசார் தங்க முனீஸ்வரனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கொலை சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த சிவகாசி கிழக்குப் பகுதி காவல் நிலையப் போலீசார் மருதாயி, அவரது மகன் மற்றும் உறவுக்காரப் பெண்ணான மதுரை மாவட்டம் வில்லூரைச் சேர்ந்த ஒருவரையும் போலீஸ் வாகனம் மூலமாக சிவகாசி கிழக்குக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த இளைஞரை வீட்டிற்கு வரவழைத்து கண்ணில் மிளகாய் பொடியை தூவி, அறிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
